34ம் எலிகேசி

புரட்சி பாசறை. கொரோனா துளைக்காத காப்பறை.

கைபேசி மணியோசை..

என்னப்பா இந்த நேரத்துல. மதியம் ஒரு மணிக்கெல்லாம் நான் சயனத்தில் இருப்பேனென்று உங்களுக்கு தெரியாதா?

மன்னியுங்கள் ப்ரபோ. தாங்கள் பாதுகாப்பு கருதி பல பாதுகாப்பு வளையங்களுக்குள் தனிமைப்படுத்தி கொண்டுவிட்டபிறகு எப்படி உள்ளீர்கள் என்ன செய்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரிவதில்லை. அரசு சொல்லி நீங்கள் செய்து கொண்ட ஒரே விஷயம் இந்த பாதுகாப்பாய் இருத்தல் மட்டும் தானே ஸ்வாமி..

சரி. சுருங்க சொல்லுங்கள். நம் காணொளி மக்களை சேர்ந்ததா? என்ன சொல்கிறார்கள்.

நம்மவர்கள், சகோதர்கள் சதாம் ஹுசைனுக்கு பிறகு இத்தனை பாதுகாப்பாக ஒருவர் ஒளிந்திருப்பதை பார்த்ததில்லை இதுவரை என்று பெருமையாக சொல்கிறார்கள் பிரபு.

அதற்காக தானே இந்த ஏற்பாடு. சரி என்ன விஷயம்

நம் படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் சிக்கலில் சிக்கி உள்ளனர் ப்ரபோ. அவர்களால் அவர்கள் சுற்றத்தாருக்கும் துன்பம் நேருமானால் நமது படை பலம் இன்னும் குறைந்து விடும். வரும் காலங்களில் போரின் போது 1 வீரன் குறைந்தால் கூட வெற்றிக்கும் தோல்விக்கும் அதுவே காரணமாகலாம். போருக்கு தயாராக பல குறுநில மன்னர்களும் புதிய எதிரிகளும் தோன்றி இருக்கும் இந்த காலகட்டத்தில் நமது வீரர்களே கூட தோல்வி பயத்தில் அவர்களிடம் சேர்ந்து விடக்கூடும்.

சரி, யாருக்கும் சந்தேகம் வரா வண்ணம் உடனடியாக நமது மருத்துவ குழுமங்களை அனுப்பி வையுங்கள். மறுபடி பல ஆண்டுகள் காத்திருப்பது இயலாது. முன்பு நான் மட்டும். இப்போதோ பக்கத்து அறையில் பாதுகாப்பாய் பதுங்கி இருக்கும் என் தனயனும். அரியணை அடைந்தே ஆகவேண்டும் இனி தாமதம் கூடாது.

பிரபு! படைவீரர்கள் சிலரால் நமது வீரர்களுக்கும் கெட்ட பெயர் வந்துள்ளது பொதுவே. வீரர்களுக்கு உதவினால் மக்களின் வெறுப்பையும் சமாளிக்க வேண்டும்

அதென்ன பிரமாதம், வழக்கம் போல் மொழி வேற்றுமொழி என்று கிளர்ச்சி செய்தால் மூடர்கள் எல்லாம் மறந்துவிடுவார்கள். நமது படைவீரர்கள் நம்மையும் நம் கையையும் பலப்படுத்துவார்கள். பிறகென்ன ஜெயம் நமதே!

தங்கள் அறிவே அறிவு! ஆணைபடியே செய்கிறேன். வருங்கால விடியலே! எழு ஞாயிறே!

க… க… க… போ!

Design a site like this with WordPress.com
Get started